அரசு இழப்பீட்டு வழங்க வலியுறுத்தி தர்பூசணி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தர்பூசணி வியாபாரிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பொதுமக்களுக்கு வெயில் காலத்தில், குறைந்த விலையில் அதிக நன்மை தரக்கூடியதாக தர்பூசணி உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக தர்பூசணி பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
தர்பூசணி சுவை, நிறத்திற்காக ரசாயனம் கலந்த கொண்ட ஊசி போடப்படுகிறது என்ற தவறான தகவலை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதால், தர்பூசணி பழத்தை சாப்பிடாமல் மக்கள் புறக்கணித்தனர்.
இதனால், ஏக்கரில், 70,000 ரூபாய் செலவு செய்து பயிரிட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு, 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தமிழகம் முழுதும் உள்ள, 20,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயிகளை கடனில் இருந்து மீட்கும் வகையில், தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சங்கத்தின் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க சென்றனர். அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.