இந்திய கட்டுமான வல்லுனர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
இந்திய கட்டுமான வல்லுனர் சங்க, தென்னக மையத்தின் புதிய தலைவர் ஆர்.நிம்ரோடு மற்றும் நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றனர்.
இந்திய கட்டுமான வல்லுனர் சங்க தென்னக மையத்தின் பவளவிழா மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் ராஜேந்திர சிங் காம்போ முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
இந்த சங்கத்தின், 2025 – 26ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆர்.நிம்ரோடு, துணை தலைவராக கே.கோபிநாதன், கவுரவ செயலராக ஜி.திவாகர், கவுரவ பொருளாளராக ஏ. சத்தியநாராயணா, கவுரவ இணை செயலராக, ஜே.நிர்மல் சந்த் சலானி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சங்கத்தின் புதிய தலைவர் ஆர்.நிம்ரோடுக்கு அடையாள மாலையை சங்கத்தின் அகில இந்திய முன்னாள் தலைவர் மற்றும் அறங்காவலர் பீஷ்மா ஆர்.ராதாகிருஷ்ணன் அணிவித்து, பொறுப்பேற்க செய்தார். இதைத்தொடர்ந்து பிற நிர்வாகிகளும் பொறுப்பேற்றனர்.
இந்த விழாவில் ஆர். நிம்ரோடு பேசியதாவது:
இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையத்தின் பவள விழாவின் போது, 50வது தலைவராக பொறுப்பேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுமான துறையினர் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகளை, நேரில் சந்தித்து தெரிவித்து தீர்வு காணப்படும்.
பிரபல தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் மாதம், 300 கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தேவைப்படும் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.