ஒன்பது ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க ஆன்மிக சுற்றுலா ரயில் அறிவிப்பு
மதுரையில் இருந்து சென்னை வழியாக இயக்கப்பட உள்ள ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலில், ஒன்பது ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயர்ந்த கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை, மக்கள் கண்டுகளிக்கும் வகையில், தனியார் பங்களிப்புடன் யாத்திரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறையில், ஒன்பது ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க, ஆன்மிக சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 12 நாட்கள் உடைய இந்த யாத்திரையில் மல்லிகார்ஜூனர், பார்லி வைத்தியநாத், அவுண்டா நாகநாத், கிருஷ்ணேஸ்வர், சோம்நாத், த்ரியம்பகேஸ்வர், ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட ஒன்பது ஜோதிர்லிங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து, வரும் ஜூன் 1ம் தேதி புறப்படும் யாத்திரை ரயில், திண்டுக்கல், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது. ‘ஏசி’ வகுப்பில் ஒருவருக்கு 37,280 ரூபாய்; படுக்கை வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புக்கு, 26,990 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, தங்கும் இட வசதி, உணவுகள், பயணக்காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இது குறித்து, மேலும் தகவல்களை பெற 7305858585 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.