சென்னை திரும்பிய பயணியர் பெருங்களத்துாரில் நெரிசல்
தாம்பரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
பின், விடுமுறை முடிந்து ரயில், பேருந்து, கார் வாயிலாக சென்னைக்கு திரும்புவர். அதுபோன்ற நேரங்களில், புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால், நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 10:00 முதல் 11:00 மணி வரை, ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால், பெருங்களத்துாரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.