பேராசையே ஊழலுக்கு காரணம் லோக் ஆயுக்தா நீதிபதி கருத்து
சேலையூரில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு சபை இயங்கி வருகிறது. இதன் மாநில தலைமை சபையின் தலைவர் திருஞானம் தலைமையில், தமிழக லோக் ஆயுக்தா நீதிபதி ராமராஜுக்கு பாராட்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தமிழக லோக் ஆயுக்தா நீதிபதி ராமராஜ் பேசியதாவது:
தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்த சத்குரு சச்சிதானந்தம், 1946, நவ., 19ல் ஜீவ சமாதி அடைந்தார்.
அவரது ஆன்மிக கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில், அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு கிளை சபைகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து ஆன்மிக பாதைகளும், மனிதனின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆசையை அங்கீகரிக்கின்றன. அதே நேரத்தில், மனிதன் பேராசை கொள்ளக்கூடாது என போதிக்கின்றன.
மனிதனுக்கு ஏற்படும் பேராசையே தீய வழிகளில் பணத்தை தேட துாண்டுகிறது. இதன் காரணமாக லஞ்சம், ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது நடக்கிறது.
ஆன்மிகம் கூறும் பேராசைப்படாதே என்பதற்கான பொருள், லஞ்சம் வாங்காதே, ஊழல் செய்யாதே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காதே என்பதே.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
புகார் அளிப்பது குறித்த விபரங்கள், தமிழ்நாடு லோக் ஆயுக்தா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.