‘பறவை, விலங்குகளின் தாகத்தை தணியுங்கள்!’
புறநகரில் கோடை வெயில் தலை துாக்க ஆரம்பித்துள்ளது. வெயில் காலத்தில் உடல் களைப்பு, உஷ்ணம் ஏற்படாமல் இருக்க, தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விலங்குகளை பொறுத்தவரையில், நாய்கள் தினமும் இரண்டு லிட்டர்; பூனைகள் 30 மி.லிட்டர்; காட்டுப்பறவைகள் 400 மி.லிட்டர் முதல் ஒரு லிட்டர்; வீட்டு பறவைகள் 300 முதல் 500 மி.லிட்டர் தண்ணீர் பருகும் என, கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோடைகாலத்தில் மனிதர்களை போல விலங்குகள், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவை, தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது.
நவீன தொழில்நுட்ப உலகில், மனிதர்களால், விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறைந்து போயுள்ளன.
ஒவ்வொரு ஆண்டு கோடையிலும், 40 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும். இதில், ஏராளமான பறவைகள் தண்ணீரின்றி இறப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
எனவே, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த பகுதி நலச்சங்கத்தினர், ஒவ்வொரு தெருவிலும் சிறு தொட்டிகள் அமைத்து, தண்ணீர் வைக்க வேண்டும் என, பிராணிகள் நல ஆர்வலர்கள், சமூக நல விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.