எழுதுவதால் கற்பனை திறன் அதிகரிக்கும் ‘எழுதுக’ அமைப்பை துவங்கி இறையன்பு பேச்சு
எழுதுவதால், கற்பனைத் திறன் அதிகரித்து, கவனம் கூர்மை அடைந்து, சமூக அக்கறை மேம்படும், என, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு கூறினார்.
மாணவ – மாணவியரிடம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த, கண்ணகி நகர், முதல் தலைமுறை கற்றல் மையத்தில், நேற்று, எழுதுக அமைப்பு துவங்கியது.
இந்த அமைப்பை, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, துவக்கி வைத்து பேசியதாவது: ராணுவ வீரர் கிள்ளிவளவன், தமிழகத்தில் மாணவர்களிடம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க, எழுதுக அமைப்பை துவங்கினார்.
அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இதில், மாணவ – மாணவியர் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
இந்த, எழுதுக அமைப்பில், கண்ணகி நகரில் இருந்து, 69 பேர் சேர்ந்தனர். எழுதுவதால் பல நன்மை ஏற்படும். கற்பனை திறன் அதிகரிக்கிறது.
கவனம் கூர்மை அடைவதுடன், சமூக அக்கறையும் அதிகரிக்கும். சக மனிதர்களை நேசிக்கும் பண்பு உருவாகும்.
எழுத வேண்டுமெனில், பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிக்கும் போது மூளை வலுவடையும். படிப்பும், தன்னம்பிக்கையும் மேம்படும். இந்த எழுதுக அமைப்பு வாயிலாக, கண்ணகி நகர் மாணவ – மாணவியர் நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பேசியதாவது:
நான் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். கல்லுாரி சென்ற பின், ஆங்கில புலமை பெற, மாணவர்கள் குழுவாக சேர்ந்து நாளிதழ்கள் வாங்கி படித்து வந்தோம்.
இப்போது அப்படி இல்லை. புத்தகம், ஆன்லைன் என பல வழிகள் உள்ளன. ஏழை மாணவர்களுக்கும், பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
அவற்றை சரியாக பயன்படுத்தி, வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, மாணவ – மாணவியர் முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.