4 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
வடபழனி காவேரி மருத்துவமனையில், நான்கு மாத குழந்தைக்கு, இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை குழும செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கல்லீரல் செயலிழப்பு, கடுமையான மஞ்சள் காமாலை ஆகிய பாதிப்புகள், நான்கு மாத குழந்தைக்கு கண்டறியப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டது.
குழந்தையின் தாய், கல்லீரல் தானம் அளிக்க முன் வந்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் சுவாமிநாதன் சம்பந்தம் தலைமையில், மருத்துவ குழுவினர், 110 கிராம் எடையுடைய தாயின் கல்லீரலின் ஒரு பகுதியை, குழந்தைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தினர்.
மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், தீவிர கவனிப்பும் தேவையாக இருந்தது. இதற்கான அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குழந்தை இயல்பு நிலையில் நலமுடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.