வியாபாரிகள் போராட்டம்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு எதிராக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் போராட்டம்
கோயம்பேடு சந்தையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை கண்டித்து, வியாபாரிகள் தர்பூசணி பழங்களை போட்டு உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பழச்சந்தையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தர்பூசணி பழங்கள் ஊசி செலுத்தி, சிவப்பு நிறத்தில் விற்கப்படுவதாகவும், அதை சாப்பிடுவதால், மக்களுக்கு ஆபத்து எனவும், வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த செயலை கண்டித்து, கோயம்பேடு பழக்கடை வியாபாரிகள், சந்தையில் திரண்டு, நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.
தர்பூசணி பழங்களை போட்டு உடைத்தும், அதை சாப்பிட்டு காட்டியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறியதாவது:
தர்பூசணியில், ஊசி செலுத்தி வியாபாரிகளும், விவசாயிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் வீடியோ வெளியிட்டார்.
தர்பூசணியை பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களில் அதுவே தானாக பழுத்து விடும்.
டன் கணக்கில் தர்பூசணி வாங்கி வந்து, ஒவ்வொன்றாக ஊசி போடுவதான் வியாபாரிகளுக்கு வேலையா.
ஒரு ஏக்கரில், 60 – 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 10 டன் தர்பூசணி விளைகிறது. ஒரு டன் 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தர்பூசணி தற்போது, 2,000 ரூபாய்க்குதான் விற்கப்படுகிறது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாிகள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சிறு, குறு வியாபாரிகளை நசுக்குகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதை, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.