நீர்த்தேக்க தொட்டிகள் சோதனை தீவிரம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில், தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, 7,268 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு, கலங்கலாக வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கோடை வெயில் கொளுத்த துவங்கிய நிலையில், சென்னையின் பல பகுதிகளில், சில நாட்களாக குடிநீர் கலங்கலாகவும், கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடனும் வருகிறது.

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீருடன் செந்நிற புழுக்களும் வந்தன. இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு, பல்வேறு உடல் நல பாதிப்புகளும் ஏற்பட்டன.

கடல் நீரை குடிநீராக்கி, துாய்மையான குடிநீர் தருவதாக கூறப்படும் பகுதிகளிலும், இதே நிலை தான் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நங்கநல்லுார் பகுதியில் உள்ள பக்தவச்சலம் நகர், -ஸ்டேட் பேங்க் காலனி, சர்வமங்களா நகர், லட்சுமி நகர், 29வது தெரு ஆகிய மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டிகள், நீர் வழித்தடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமின்றி, குடிநீர் மாதிரி எடுத்து, வாரித்தியத்தினர் பரிசோதனை செய்ததோடு, ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர். இதேபோல, பல மண்டலங்களிலும், குடிநீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:

குடிநீரில் குளோரிநேஷன் செய்வதால், குழாய் வாயிலாக புழுக்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட சென்டிகிரேட் வெப்ப நிலையில் வைத்து, ‘டிரீட்’ செய்து அனுப்புகிறோம்.

அதுபோன்ற குடிநீரில் புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எங்கேனும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலக்கும் நிலையில், சில இடங்களில் புழுக்கள் வரலாம்.

பெரும்பாலும், குடியிருப்புகளில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, 10 நாட்களுக்கு மேல் துாய்மைப்படுத்தவில்லை எனில், புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, குடியிருப்பில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்தால், இதுபோன்ற புழுக்கள் பிரச்னையை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *