ஆட்டிசம்’ குழந்தைகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்
‘ஆட்டிசம் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் தனித்துவமாக இருப்பதால், மக்கள் ரசித்து வாங்குகின்றனர்,” என, ‘சவேரா’ ஹோட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி தெரிவித்தார்.
‘சவேரா’ ஹோட்டல் சார்பில், உலக ‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு தினத்தையொட்டி, ‘ஆட்டிசம்’ குழந்தைகள் வரைந்த ஓவியங்களின் விற்பனை கண்காட்சி, மயிலாப்பூரில் உள்ள ‘சவேரா’ ஹோட்டலில் நேற்று துவங்கியது.
‘சவேரா’ ஹோட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, கண்காட்சியை துவக்கி வைத்து கூறியதாவது:
‘ஆட்டிசம்’ குழந்தைகளின் நல்ல மனதிற்காகவும், அவர்களை குறித்த விழிப்புணர்வுக்காகவும், கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
குழந்தைகளின் மீது உள்ள பரிதாபம், அனுதாபத்தால், இங்குள்ள ஓவியங்களை மக்கள் வாங்குவது இல்லை. மாறாக, குழந்தைளின் ஓவியங்கள் அழகாகவும், தனித்துவமாகவும் இருப்பதால், அதை ரசித்து வாங்குகின்றனர்.
அனைவரும் ஓவிய கண்காட்சியை பார்வையிட்டு, ஆட்டிசம் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘சால்ட் ஆடியோஸ்’ அகாடமி நிறுவனர் தீனா கூறுகையில், ”ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து பேசி வருகிறோம். ஆனால், இங்கு வைத்துள்ள ஓவியங்கள் அனைத்தும், உண்மையான நுண்ணறிவு திறன் கொண்ட குழந்தைகள் வரைந்தவை. ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, இக்கண்காட்சி நடக்கிறது,” என்றார்.
‘பிரஷ் வித் ஆர்ட்’ தொண்டு நிறுவனத்தின், ஓவிய கலை ஆசிரியர் மாலா சின்னப்பா கூறுகையில், ”ஆட்டிசம் குழந்தைகளுக்கு 6 வயது முதல், ஓவியக் கலை பயிற்சி அளித்து வருகிறோம். அதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறோம். கண்காட்சியில், 2,800 ரூபாய் முதல் 4,200 ரூபாய் வரை உள்ள ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன,” என்றார்.
இந்த விற்பனை கண்காட்சியில், 17 ஆட்டிசம் குழந்தைகள் வரைந்த, 25க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி வரும் 13ம் தேதி வரை, காலை 7:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.