1,000 கிலோ கட்டட கழிவுக்கு ரூ.800 கட்டணம் எடைபோட்டு வாங்கப்போகுது மாநகராட்சி

‘கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில், கட்டட கழிவுகளை பெற்று கொள்ள, 1,000 கிலோவுக்கு, 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்’ என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில், கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.

* அதன்படி, 1,000 கிலோவுக்கு கீழ் குறைவாக கட்டட கழிவுகளை, எவ்வித கட்டணமும் இன்றி, அனுமதிக்கப்பட்டுள்ள 15 இடங்களில், மாநகராட்சி பெற்று கொள்ளும். இதற்காக, 1913 என்ற உதவி எண் மற்றும் நம்ம சென்னை செயலி வாயிலாக பதிவு செய்யலாம்

* 1,000 கிலோ முதல் 20,000 கிலோ வரை கட்டுமானம் கழிவு உருவாக்குபவர்கள், மாநகராட்சியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட லாரி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அகற்றலாம்.

மேலும், தாங்களாகவே கட்டட கழிவை அகற்ற வாகனங்களை அமர்த்தலாம் அல்லது மாநகராட்சி சேவையை பயன்படுத்தி, 1,000 கிலோவுக்கு, 2,500 ரூபாய் கட்டணத்தில் கழிவு அகற்றி கொள்ளலாம்

* இந்த கழிவுகள், கொடுங்கையூர், பெருங்குடி கழிவு செயலாக்க மையங்களுக்கு கொண்டு வரும்போது, 1,000 கிலோவுக்கு, 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்

* 20,000 கிலோவுக்கு மேல் கட்டட கழிவு உருவாக்குபவர்கள், தாங்களாகவே, கொடுங்கையூர், பெருங்குடிக்கு கழிவை கொண்டு வர வேண்டும். இவற்றிற்கும், 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறை வரும், 21ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதியை மீறினால் அபராதம் வதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பொது பயன்பாட்டு பகுதிகளில், பெருமளவு கழிவு உருவாக்குபவர்ளுக்கு, 5,000 ரூபாய்; சிறிய அளவில் உருவாக்குபவர்களுக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், 6,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடம் மற்றும் இடிபாட்டு இடங்களில் நிபந்தனைகளை பின்பற்றாதவர்களுக்கு, தினமும், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு மாநகராட்சியின், https://chennaicorporation.gov.in/gcc/CandD_Waste_Management என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *