ஷவர்மா, மயோனைஸ் சாப்பிட்ட 33 பேர் ‘அட்மிட்’ விஷமாகும் உணவு பிரபல ஹோட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்
சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட 33 பேர், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தரமற்ற பீப் ஷவர்மா மற்றும் மயோனைஸ் விற்றதுதான் உடல் பாதிப்பு ஏற்பட காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ேஹாட்டலை போலீசார் இழுத்து மூடினர்.
சென்னை, அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில், ‘பிலால்’ பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல்களில் சிறப்பு பேக்கேஜ் முறையில் அசைவ உணவு வழங்கப்படுகிறது.
இந்த ஹோட்டல்களில் நேற்று முன்தினம் உணவு சாப்பிட்ட, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 21, ஜெய்சங்கர், 20, ஷாம், 20, விவேகாந்தன், 21, மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஸ்டீபன், 32, ரெபேக்கா, 30, ஆகிய ஆறு பேரும் வீட்டிற்கு சென்றனர்.
சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அரசு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் ஆறு பேர் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 33 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அண்ணா சாலை பிலால் ஹோட்டலில் நான்கு பேர்; திருவல்லிக்கேணி பிலாலில் 29 பேர் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில், நேற்று ஆய்வு செய்தனர்.
ஆனால், ஹோட்டல் உரிமையாளர், நுழைவாயில் கதவை பூட்டி சென்றுவிட்டார். அதிகாரிகள் அவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அழைப்பை ஏற்கவில்லை. பின், காவல் துறையுடன் இணைந்து, உணவகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
அதேநேரம், அண்ணாசாலை பிலால் ஹோட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட ஆறு பேர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியப்போது, இன்று சோதனை நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 33 பேர் பாதிக்கப்பட்டதற்கு, தரமற்ற தயாிரப்புகளான பீப் ஷவர்மா மற்றும் மயோனைஸ் தான் காரணம் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
இறைச்சியை முறையாக பதப்படுத்தாவிட்டாலும், வேக வைக்காவிட்டாலும், ‘ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ்’ உள்ளிட்ட பாக்டீரியா உருவாகி விடுகிறது.
சரியாக வேக வைக்காமல் சாப்பிடும்போது, உயிர்கொல்லியாகவும் மாற்றிவிடும்.
பாதிக்கப்பட்ட 33 பேரில் பலர், பீப் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அனைவரும், ஏதேனும் ஒரு வகையில், மயோனைஸ் சாப்பிட்டுள்ளனர்.
ஷவர்மாவில் சேர்க்கப்படும் இறைச்சி, ஐந்து மணி நேரத்திற்கு மேல் கம்பியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். முறையாக அனைத்து பகுதிகளிலும் தீ பரவவில்லை என்றால், பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
அதேபோல், முட்டை வெள்ளை கரு பயன்படுத்தி தயாரிக்கப்படும், மயோனைஸ் பல மணி நேரத்திற்கு தாங்காது. அவையும் பாக்டீரியா உட்புகக்கூடியதுதான்.
இதுபோன்ற பாக்டீரியா பாதித்த தரமற்ற இறைச்சி, மயோனைஸ் ஆகியவற்றை சாப்பிடும்போது, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற வகையில்தான், இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஹோட்டல்களில் ஆய்வு செய்து, அதன் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியப்பிறகே, இறைச்சி, மயோனைஸ் எத்தனை நாட்களுக்கு முந்தையது; எங்கே தவறு நடந்தது என்பது தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாரபட்சமின்றி நடவடிக்கை
”முறையான சோதனை நடத்தப்படும் வரை, உணவகத்தில் மக்கள் சாப்பிடக்கூடாது என்பதற்காக, தற்காலிகமாக பூட்டி உள்ளோம். உணவகத்தில் போடப்பட்டுள்ள பூட்டை, துறை அனுமதியின்றி உடைத்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு சுகாதாரமாக உணவை வழங்க வேண்டும் என்பதற்காக, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பி.சதீஷ்குமார், நியமன அலுவலர்,
உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாவட்டம்.