முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.75 லட்சத்தில் திருப்பணி
சென்னை, ஆயிரம் விளக்கு, தர்மாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று ஆய்வு மேற்கொண்டார்
பின், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
கோவில்களில் திருப்பணிகளும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகளும், தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஆயிரம் விளக்கு, தர்மாபுரம் மாரியம்மன் கோவிலில், 35 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, இக்கோவிலில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த, இப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, 75 லட்சம் ரூபாயில், முத்துமாரியம்மன் சன்னதி, முன் மண்டபம் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம், இறுதிக்குள் திருப்பணிகள் துவக்கப்படும்.
மேலும், பக்தர்களின் பயன்பாட்டிற்கு மண்டபமும் அமைத்து தரப்படும். அனைத்து பணிகளையும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.