ஆன்லைன் மோசடி அதிகரிப்பு விழிப்புடன் இருக்க எச்சரிக்கை
பெசன்ட்நகர், சென்னை சைபர் கிரைம் போலீசார் சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கல்லுாரி மாணவர்கள், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்து நாடகம் நிகழ்த்தினர்.
பின், சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
டிஜிட்டல் மோசடி, ஆன்லைன் முதலீடு, கடன் செயலி, மேட்ரிமோனி செயலி சார்ந்து, அதிகமாக மோசடிகள் நடக்கின்றன. இதில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆர்.பி.ஐ.,யால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியா என ஆராய்ந்து, பணம் முதலீடு செய்வதோ, கடன் வாங்குவதோ வேண்டும்.
அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, செயலிகள், மொபைல் போன் அழைப்பு பேச்சுகளில் மயங்கினால், பணம், உடைமைகளை இழக்க நேரிடும்.
வரன் பார்ப்போர், நேரில் சென்று தீர விசாரிப்பது அவசியம். செயலி குறித்தோ, மொபைல் போன் அழைப்பு குறித்தோ சந்தேகம் எழுந்தாலோ, ஏமாற்றப்பட்டாலோ, 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.