‘நீட்’ மாணவி தற்கொலை அரசுக்கு பழனிசாமி கண்டனம்

சென்னை, சென்னை அருகில், ஊரப்பாக்கத்தில், ‘நீட்’ தேர்விற்கு தயாராகி வந்த மாணவி, திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், சாஸ்திரி பவன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வராஜ், 49. இவரது, மூத்த மகள் தேவதர்ஷினி, 19, மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன், மூன்று முறை ‘நீட்’ தேர்வு எழுதி உள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.

எனவே, நடப்பாண்டு மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தன் அறையில், மின்விசிறி கொக்கியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிளாம்பாக்கம் போலீசார், தேவதர்ஷினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ‘நீட்’ தேர்வு நெருங்க நெருங்க, தேவதர்ஷினிக்கு பயம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக, அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நீட் தேர்வை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து, அதை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்க, தி.மு.க., அடித்தளமிட்டது. அதோடு அல்லாமல், ஆட்சிக்கு வந்தால், ‘நீட்’ என்ற தேர்வே தமிழகத்தில் இருக்காது என, பச்சை பொய் சொல்லி ஏமாற்றிய தி.மு.க.,வுக்கு, தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா; இதுவரை இறந்த 19 மாணவர்களின் உயிர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன; நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர, இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? மாணவி தர்ஷினி மரணத்திற்கு, தி.மு.க., அரசே முழு பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பா.ம.க., தலைவர் அன்புமணி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, எட்டு ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது, பெரும் கவலை அளிக்கிறது. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று. நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு செவி மடுக்கவில்லை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுத்த நாளே, நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவர்களின் தற்கொலைக்கு, மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *