அரசு பள்ளியில் கட்சி நிகழ்ச்சியால் சர்ச்சை முன்னாள் மாணவர்கள் கண்டனம்

சென்னை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என, பள்ளி கல்வித் துறை தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவை மீறி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில், முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ரம்ஜான் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பெட்டகங்கள் வழங்கினார். நிகழ்வில் தயாநிதி எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிற்றரசு ஏற்பாடு செய்திருந்தார். அரசு தடை உத்தரவை மீறி, ஆளும் கட்சியினர் நடத்திய மதம் சார்ந்த இந்நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, பள்ளி முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:

இப்தார் நோன்பு திறப்பதும், முஸ்லிம்களுக்கு உதவிகள் வழங்குவதும் நல்ல விஷயம் தான். அதை ஆளுங்கட்சியினர் என்பதால், அரசு பள்ளியில் நடத்துவது முறையற்றது. ஏதாவது தனியார் திருமண மண்டபம் அல்லது கட்சிக்கு சொந்தமான இடங்களில் நடத்தி இருக்கலாம்.

இதற்கு பள்ளிக் கல்வி துறை எப்படி அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை. பள்ளிக்கூடங்களில் மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதை, அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *