வீட்டு கடன் பெற ரூ.15,000 லஞ்சம் கூட்டுறவு செயலர் உட்பட இருவர் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், ஹோட்டல் தொழில் செய்வதற்காக, பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை, திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து, கடன் பெற அணுகினார்.
கடன் வழங்குவதற்கான நடவடிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, கடந்த 27ம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில், 11.76 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
அப்போது, கூட்டுறவு சங்க செயலர் ராமலிங்கம், 17,000 ரூபாயை, கணக்காளர் ஏகாம்பரத்திடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது, சிவகுமார், கணக்காளர் ஏகாம்பரத்திடம் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கூறிய போது, அவர் 15,000 ரூபாய் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவகுமார், திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று, ரசாயனம் தடவிய பணத்தை சிவகுமாரிடம் கொடுத்தனர்.
அந்த பணத்தை செயலர் ராமலிங்கம் அறிவுறுத்தல்படி, கணக்காளர் ஏகாம்பரத்திடம் அளித்தபோது, கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.