பாரதி தீர்த்த மகா சுவாமிகள் 75 வது ஜெயந்தி விழா

சென்னை : சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சுவாமியின், 75வது ஜெயந்தி விழாவையொட்டி, இன்று முதல் வரும், 4ம் தேதி வரை, மடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன

கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம், கூடலி சிருங்கேரி மகா சம்ஸ்தானம், தக் ஷிணாம்ய ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சுவாமிகள், 1951ம் ஆண்டு ஏப்.,3ம் தேதி அவதரித்தார். அவரது இயற்பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. தன் ஏழாவது வயதில் வேதங்களை படிக்க துவங்கினார். கடந்த, 1966ல் சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமி சீடரானார். 1974ம் ஆண்டு சிருங்கேரி சாரதா பீடத்தின், 36வது பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு, ‘பாரதி தீர்த்தர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அவரது, 75வது ஜெயந்தி விழா, ‘வஜ்ரோத்ஸவ பாரதி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இன்று முதல் ஏப்., 4ம் தேதி வரை, சிருங்கேரி, சந்திரசேகர பாரதி சபா பவன் ஸ்ரீமடத்தில், தினமும் மாலை, 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

இன்று சென்னை, ராமநாத் வெங்கட் பகவத் குழுவினர் கர்நாடக இசை; நாளை மைசூர் ஸ்ரீ ஹர்ஷா குழுவினரின் சங்கர ஸ்தோத்ர கயனா பக்தி கான சுதா; 1ம் தேதி சென்னை ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசை; 2ம் தேதி பெங்களூரு சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் குழுவினரின் நாம வைபவம்; 3ம் தேதி நரசிம்ம வனத்தில் உள்ள குரு நிவாஷில் 75வது ஜெயந்தி விழா,; 4ம் தேதி ‘மாருதி பிரதாபா’ நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *